அசாம், மேகாலயாவில் கனமழையால் வெள்ளம்; 31 பேர் உயிரிழப்பு
திரிபுரா தலைநகர் அகர்தலாவிலும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக மாநிலம் முழுவதும் 2930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது.
பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக பயிர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாகனங்களுக்கு தீ வைப்பு அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
அசாம், மேகாலயாவில் கனமழை பாதிப்புக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 12 பேரும் மேகலாயாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவிலும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெறும் 6 மணி நேரத்தில் 145 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அகர்தலாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.