பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் 38 கட்சியினர் ஆலோசனை


பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் 38 கட்சியினர் ஆலோசனை
x

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 38 கட்சியினர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் சோனியா காந்தி தலைமையில் 26 கட்சி தலைவர்கள் 2-வது நாளாக கூடி முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜனதா விரும்புகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜனதாவுக்கு எதிரான அரசியல் கட்சிகள் ஓரணியாக திரண்டு வருகின்றன.

முதலில், கடந்த மாதம் பாட்னாவிலும், 2-வதாக பெங்களூருவிலும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாட்னா கூட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலில் நடந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

சோனியாகாந்தி

அதில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. 2-வது நாள் கூட்டத்தில் எத்தகைய திட்டங்களை ஆய்வு செய்வது என்று பேசிவிட்டு கலைந்தனர்.

2-வது நாள் கூட்டம்

இந்நிலையில், நேற்று 2-வது நாள் கூட்டம் அதே ஓட்டலில் நடந்தது. கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தலைவரும் ஒரு பெயரை சிபாரிசு செய்தனர்.

மாநில அளவில் கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி பேசப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு செய்து கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதி களை பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி பெயர் 'இந்தியா'

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' (இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி) என்று பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டில் மதசார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகியவை குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப செய்வது உடனடி தேவை ஆகும். கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது.

பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கவர்னர்களின் செயல்பாடுகள், அரசியல் சட்ட விதிமுறைகளை மீறுவதாக உள்ளன. அரசியல் எதிரிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்டபூர்வ தேவைகள், உரிமைகள் மத்திய அரசால் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டம் முடிவடைந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பா.ஜனதா வரிந்து கட்டுகிறது

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பா.ஜனதாவும் வரிந்து கட்டுகிறது. கூட்டணியை பலப்படுத்த வேண்டிய அவசியம், பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. சிவசேனா, ஐக்கியஜனதாதளம், அகாலிதளம் போன்ற முக்கிய கட்சிகள், தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை.

இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட வாக்கு வங்கி கொண்ட உதிரி கட்சிகள் மற்றும் ஏற்கனவே விலகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை பா.ஜனதா மேற்கொண்டது.

அதன் பயனாக, பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி, உத்தரபிரதேசத்தில் ஓம்பிரகாஷ் ராஜ்பார் போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தனர்.

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, துணை முதல்-மந்திரி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவை உள்பட 38 கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தன.

அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை 18-ந் தேதி (நேற்று) டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 38 கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

மோடிக்கு ஆளுயர மாலை

இந்நிலையில், மாலை6 மணியளவில், டெல்லி அசோகா ஓட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு வந்த தலைவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியும், பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத் தவ்டேவும் வரவேற்றனர்.

கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு நட்டா, ஏக்நாத் ஷிண்டே, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பிரதமருக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு இடது புறத்தில் பா.ஜனதா தலைவர் நட்டாவும், வலது புறத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்திருந்தனர்.

38 கட்சிகள் பட்டியல்

கூட்டத்தில் பங்கேற்ற 38 கட்சிகளின் விவரம் வருமாறு:-

1. பா.ஜனதா, 2. சிவசேனா (ஷிண்டே), 3. தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்), 4. ராஷ்டிரிய லோக் ஜனசக்தி, 5. அ.தி.மு.க., 6. அப்னா தளம் (சோனிலால்), 7. தேசிய மக்கள் கட்சி, 8. தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, 9. அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம், 10. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, 11. மிசோ தேசிய முன்னணி, 12. திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி, 13. நாகா மக்கள் முன்னணி, 14. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), 15. அசாம் கண பரிஷத், 16. பா.ம.க., 17. த.மா.கா., 18. ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், 19. சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி, 20. அகாலிதளம் (சன்யுக்த்), 21. மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி, 22. ஜனநாயக் ஜனதா கட்சி, 23. பிரஹார் ஜனசக்தி கட்சி, 24. ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, 25. ஜன சுராஜ்ய சக்தி கட்சி, 26. குகி மக்கள் கூட்டணி, 27. ஐக்கிய ஜனநாயக கட்சி, 28. மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி, 29. நிஷாத் கட்சி, 30. என்.ஆர்.காங்கிரஸ், 31. எச்.ஏ.எம்., 32. ஜனசேனா, 33. அரியானா லோஹிட் கட்சி, 34. பாரத் தர்ம ஜனசேனா, 35. கேரளா காமராஜ் காங்கிரஸ், 36. புதிய தமிழகம், 37. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), 38. கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி.

தேர்தலை சந்திக்க ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பது, வாக்காளர்களை கவர்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வது பற்றியும் பேசப்பட்டது. ஒவ்வொரு கட்சி தலைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது ஆழ்ந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கூட்டணி, காலத்தை வென்ற கூட்டணி. தேச முன்னேற்றத்தை அதிகரிப்பதுடன், பிராந்திய உணர்வுகளையும் இக்கூட்டணி பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story