12 வருட இடைவெளிக்கு பின் இந்தியா-வங்காளதேசம் கூட்டு நதிகள் ஆணையத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
12 வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியா-வங்காளதேசம் கூட்டு நதிகள் ஆணையத்தின் 38வது மந்திரிகள் கூட்டம் நேற்று தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. 12 வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியக் குழுவிற்கு மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார். வங்காளதேசம் பிரதிநிதிகள் குழுவிற்கு நீர்வளத்துறை இணை மந்திரி ஜாஹீத் பரூக் தலைமை தாங்கினார்.
இந்த இருதரப்பு சந்திப்பின் போது, இரு நாடுகளிலும் நிலவும் நதிகளின் நீர் பகிர்வு, வெள்ளம் தொடர்பான தகவல்களை பகிர்தல், நதிகள் மாசுபடுவதை தடுப்பது, ஆறுகளில் வண்டல் மண் படிதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் தொடர்பான அனைத்து இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குஷியாரா நதி நீரை இடைக்கால அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் இறுதி செய்தனர்.இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019 அக்டோபரில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டிய நதிகள் தொடர்பான பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இருதரப்பு பொறிமுறையாக 1972 இல் இந்தியா-வங்காளதேச கூட்டு நதிகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்தியாவும் வங்காளதேசமும் 54 நதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன, அவற்றில் ஏழு நதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, இது சம்பந்தமாக 'நீர் பகிர்வு' முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டன. இது சம்பந்தமாக, தரவு பரிமாற்றத்திற்காக மேலும் எட்டு நதிகளை இணைக்க வேண்டும். இது தொடர்பாக நதிகள் இணைப்பு ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு மேலும் விவாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.