3 மாதங்களில் 3-வது சம்பவம்: விடுதி உணவில் புழுக்கள்; குருசேத்ரா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்


3 மாதங்களில் 3-வது சம்பவம்: விடுதி உணவில் புழுக்கள்; குருசேத்ரா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
x

அரியானாவில் குருசேத்ரா பல்கலைக்கழக விடுதி உணவில் புழுக்கள் கிடந்ததன் எதிரொலியாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சண்டிகர்,


அரியானாவில் குருசேத்ரா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் உள்ள விடுதியில் மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், மாணவர் ஒருவர் அவர் சாப்பிட்ட விடுதி உணவில் புழு ஒன்றை பார்த்துள்ளார். அவர் பிற மாணவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இதன்பின் அவர்கள் உணவை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். உணவின் தரம் பற்றி அவர்கள் உயரதிகாரிகளிடம் புகாரளித்து உள்ளனர். இது 3 மாதங்களில் நடந்த 3-வது சம்பவம் ஆகும்.

எனினும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பிரஜேஷ் சாவ்னி கூறும்போது, இந்த கேண்டீன் உடனடியாக மூடப்பட்டு விட்டது.

இந்த கேண்டீனில் சாப்பிட்டு வந்த மாணவர்கள் வேறு கேண்டீனுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இந்த விவகாரம் பற்றி விசாரிக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. கேண்டீனில் உள்ள உணவு மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, உணவில் புழுக்கள் கிடந்ததன் எதிரொலியாக மாணவர்கள் தலைமை வார்டன் அலுவலகம் முன் ஒன்று திரண்டு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். கேண்டீன் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அப்போது கோரிக்கை விடுத்தனர்.


Next Story