ராஜஸ்தானில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து - 4 பேர் பலி
ராஜஸ்தானில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பில்வாரா (ராஜஸ்தான்),
ராஜஸ்தானில் நேற்று மாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பந்தன்வாரா நகருக்கு அருகே பில்வாரா-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. பில்வாராவில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை 48-ல் உள்ள அரசு சமூக சுகாதார நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஹவா சிங், சந்தீப் சிங், ஷேர் சிங், சத்வீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பினாயில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பெரும்பாலான டிரெய்லர் லாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்படுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.