பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் மேலும் 4 மான்கள் செத்தன
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மான்கள் செத்தன.
பன்னரகட்டா:-
பெங்களூரு புறநகர் பகுதியில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு உட்பட்ட பகுதியில் விலங்குகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிற பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் விலங்குகள் அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் உயிரியல் பூங்காவில் கண்காணிக்கப்பட்டு வந்த 7 சிறுத்தை குட்டிகளும், 16 மான்களும் கடந்த வாரம் அடுத்தடுத்து செத்தன.
அவற்றை பிரேத பரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் அவை செத்தது தெரிந்தது. அதனை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மேலும் 4 மான்கள் செத்தன. இதுகுறித்து பராமரிப்பு மைய செயல் இயக்குனர் சூர்யா சென் கூறுகையில், பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கு அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனினும், நோய் பாதிப்பு அதிகம் கொண்ட விலங்குகள் அடுத்தடுத்து செத்துவிடுவதாக கூறினார்.