செல்போன் கடையில் திருடிய 4 பேர் கைது; ரூ.8 லட்சம் கார் பறிமுதல்


செல்போன் கடையில் திருடிய 4 பேர் கைது; ரூ.8 லட்சம் கார் பறிமுதல்
x

மங்களூரு அருகே செல்போன் கடையில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பிஜூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் உப்புந்தா கிராமத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு பிரசாந்த் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மா்மநபர்கள் சிலர் அவரது கடையின் ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள், உதிரிபாகங்கள் மற்றும் ரூ.3,500 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

மறுநாள் காலையில் கடைக்கு வந்த பிரசாந்த், கடையில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பைந்தூர் போலீசில் புகார் அளித்தாா்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மா்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் கடைக்குள் புகுந்து திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பட்கல் பகுதியை சேர்ந்த முகமது இப்சல் (வயது 27), முகமது அசீம் டோனா(20), முகமது ரபி (21) மற்றும் முகமது ரஹிக் (22) என்பது தெரியவந்தது.

மேலும் அவா்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story