காரில் கடத்திய ரூ.43 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது
குமட்டா அருகே காரில் ரூ.43 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார்வார்;
உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா பர்கி பகுதியில் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள சாலையோரம் கார் ஒன்று வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரின் கண்ணாடி வழியாக உள்ளே பாா்த்துள்ளனர். அப்போது காரில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது.
இதுகுறித்து கோகர்ணா போலீசாருக்கு அந்தப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் ேபாலீசார் காரில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதேப்பகுதியை சேர்ந்த மதுக்கடை ஊழியரான ஜனார்த்தன ரெட்டி என்பவர் மதுபானங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு ஈஸ்வரநாராயணா என்பவர் உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.