மராட்டிய மாநில 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அப்பா தேர்ச்சி; மகன் தோல்வி - வினோத நிகழ்வு!


மராட்டிய மாநில 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அப்பா தேர்ச்சி; மகன் தோல்வி - வினோத நிகழ்வு!
x

புனேவை சேர்ந்த 43 வயதான நபர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினர்.

மும்பை,

மராட்டிய மாநில 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 96.94 ஆகும். கடந்த ஆண்டு (2020-21), கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 9 ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த முறை, புனேவை சேர்ந்த 43 வயதான ஒரு நபர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். ஆனால், தந்தை தேர்வில் தேர்ச்சி பெற்றார், மகன் தோல்வியடைந்தான்.

பாஸ்கர் வாக்மரே என்ற நபர் புனே நகரில் வசித்து வருகிறார். அவர் 7 ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டு, தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையில், அவர் மீண்டும் படிப்பைத் தொடர ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக, கிட்டத்தட்ட 30 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு தனது மகனுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் படிப்பேன். வேலைக்குப் பிறகு தேர்வுக்குத் தயாராகி வந்தேன்.இப்போது தேர்வில் நான் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தாலும், இரண்டு தாள்களில் எனது மகன் தோல்வியடைந்ததால் வருத்தம் அடைந்துள்ளேன்" என்று கூறினார்.

அவருடைய மகன் 10 வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும், தன்னுடைய தந்தை தேர்ச்சி பெற்றதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இந்நிலையில், தன் மகனுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

கல்வியில் சாதிக்க, வயது ஒரு தடையல்ல என்பதை பாஸ்கர் வாக்மரே நிரூபித்துவிட்டார்.


Next Story