தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரியால் பயங்கர விபத்து: அப்பளம் போல நொறுங்கிய வாகனங்கள் - 38 பேர் காயம்


தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரியால் பயங்கர விபத்து:  அப்பளம் போல நொறுங்கிய வாகனங்கள் - 38 பேர் காயம்
x

மராட்டியம் புனே அருகே நடந்துள்ள மிக மோசமான வாகன விபத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பளம் போல நசுங்கியது.

புனே,

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு என இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிப்பற்ற பல உயிர்களை நாம் இழக்க நேரிடுகிறது.

ஒரு சில வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் சாலைகளில் செல்லும் அனைவருக்குமே பாதுகாப்பற்ற ஒரு சூழல் உருவாகி உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் புனேவில் அருகே உள்ள நவலே பாலத்தில் தான் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டேங்கர் லாரி அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் மோதியதில் பலர் காயமடைந்தனர்.

டேங்கர் லாரி பல வாகனங்கள் மீது வரிசையாக மோதிய இந்த கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் படுகாயமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த வாகன விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாகப் பாலத்தில் வரிசையாக 48 வாகனங்கள் அப்பளம் போல நசுங்கிக் குவிந்து கிடக்கிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

டேங்கர் லாரி ஒன்றின் பிரேக் செயலிழந்தே இந்த விபத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மும்பை செல்லும் முக்கிய சாலைகளில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இரு தரப்பும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


Next Story