இருதலை பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்க முயற்சி - 5 பேர் கைது
திருப்பூரிலிருந்து கேரளாவுக்கு இருதலை பாம்புகளை கடத்தி விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
திருப்பூரிலிருந்து இருதலை பாம்புகளை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு நேற்று காலை ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.அபோது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றார்கள்.
வனத்துறை அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்பு அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு பையில் இரண்டு இருதலை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் பாம்புகளை பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்து அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்பு 5 பேரையும் கருவரகுண்டு வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பேரும் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த ராஜாமுகமது ( வயது39),கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் கரீம் (42) ,கமருதீன் (40) ,அனிபா முகமது (46), ஆனந்தன் (28) என்பது தெரிய வந்தது.
இவர்கள் ஐந்து பேரும் திருப்பூரிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவில் ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததாகவும்,அதனால் ஐந்து பேரும் இரண்டு பாம்புகளுடன் அப்துல்கரீம் வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும்,பாம்பை விலைக்கு வாங்குவதாக கூறிய நபரை தேடி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.