கே.ஆர்.எஸ் அணைக்கு ஆபத்தா?; பேபி பெட்டா மலையில் 5 கல்குவாரிகளில் இன்று வெடி வைத்து சோதனை- விவசாயிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு-பரபரப்பு


கே.ஆர்.எஸ் அணையின் அருகே பேபி பெட்டா மலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 இடங்களில் வெடி வைத்து சோதனை நடக்க உள்ளது. இதற்கிடையே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டியா:

கே.ஆர்.எஸ். அணை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணை அமைந்துள்ளது. இந்த அணை அருகே 20 கி.மீ தொலைவில் பாண்டவபுரா தாலுகாவில் பேபி பெட்டா மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் வெடிகள் வைக்கும்போது கே.ஆர்.எஸ். அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தரப்பில் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு பேபி பெட்டா பகுதியில் கல்குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதித்தது.

வெடி வைத்து சோதனைக்கு அனுமதி

இந்த இடைக்கால தடையை எதிர்த்து கல்குவாரி உரிமையாளர்கள் மாநில அரசு மற்றும் காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது அவர்கள் பேபி பெட்டா கல்குவாரியால் எந்த பாதிப்பும் இல்லை. வெடி விபத்தின் போது எந்தவிதமான அதிர்வும், ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து பேபி பெட்டாவில் மீண்டும் கல்குவாரிகளை இயக்கும் நோக்கில், கல்குவாரிகளில் வெடி வைத்து சோதனை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு நேற்று முதல் 31-ந்தேதி வரை வெடி வைத்து சோதனை செய்து அறிக்கை தாக்கல் ெசய்ய உத்தரவிடப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

இந்த தகவல் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு தெரியவந்ததும், அவர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் ஜார்கண்ட் நிபுணர் குழுவினர் மண்டியாவுக்கு வரகூடாது. பேபி பெட்டா பகுதியில் சோதனையில் முறையில் வெடி வைக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று கே.ஆர்.எஸ் அணையின் முக்கிய நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கனிம மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதை பார்த்த கல்குவாரி ஆதரவாளர்கள் விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குறுக்கிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் விவசாயிகள் கேட்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று வெடி வைக்கப்படும்

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கல்குவாரிகளில் வெடி வைத்து சோதனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கனிம மற்றும் புவியியல் துறை சேர்ந்த நிபுணர் பத்மஜா கூறுகையில், பேபி பெட்டாவில் கல்குவாரியில் வெடி வைப்பதால் கே.ஆர்.எஸ் அணையில் விரிசல் ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்குவாரி உரிமையாளர்கள் மீண்டும் இயக்க அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் பேபி பெட்டா பகுதியில் உள்ள கல்குவாரியை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சோதனை முறையில் வெடி வைக்கப்படுகிறது. இதற்காக ஜார்கண்ட்டை சேர்ந்த 4 புவியியல் நிபுணர்கள் வந்துள்ளனர். அவர்கள் நேற்று பேபி பெட்டாவில் 10 குவாரிகளை ஆய்வு செய்தனர்.

அதில் முதற்கட்டமாக நாளை (இன்று) பேபி பெட்டாவில் எஸ்.எல்.வி, எஸ்.டி.ஜி குவாரி, பண்ணம்பாடி, காவிரிபுரா, டி.எம்.ஒசூரில் தலா ஒன்று என 5 குவாரிகளின் சோதனை முறையில் வெடி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு குவாரியிலும் 10 முதல் 15 மீட்டர் ஆழமும், 5.96 கி.மீ முதல் 20 கி.மீ. வரை வெடி வைக்கப்படுகிறது என்றார்.

சமாதான முயற்சி

இதற்கிடையே போராட்டம் நடத்தும் விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story