காங்கிரசின் 5 இலவச திட்டங்களால் பா.ஜனதாவுக்கு பின்னடைவு
காங்கிரசின் 5 இலவச திட்டங்களால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர் களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு பின்னடைவு
காங்கிரஸ் கட்சி 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தது. அந்த இலவச திட்டங்களுக்கு மந்திரிசபையும் ஒப்புதல் அளித்துள்ளது. அரசிதழிலும் 5 இலவச திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் அந்த 5 இலவச திட்டங்கள் பற்றி அதிகமாகவும் பேசவும், எதிர்ப்பு தெரிவிக்கவும், விமர்சிக்கவும் விரும்பவில்லை.
தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்து, வீடுகளுக்கே உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கி இருந்தது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட இந்த இலவச திட்டங்கள் காரணம் என்பது என்னுடைய கருத்தாகும். அந்த 5 இலவச திட்டங்களால் மக்களுக்கு நல்லது நடக்கட்டும் என்பது எனது விருப்பமாகும்.
விசாரணை நடத்தட்டும்
பா.ஜனதா ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் மந்திரி எம்.பி.பட்டீல் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். பா.ஜனதா ஆட்சியில் எந்த ஊழலும், முறைகேடும் நடக்கவில்லை. விசாரணை நடத்துவதாக கூறி இருப்பது பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை. விசாரணை நடத்தினால், அதுபற்றி கவலைப்படுவதும் இல்லை. விசாரணை நடத்தட்டும். தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதுபற்றி முடிவு செய்வார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் இன்னும் நடைபெறவில்லை. அதன்பிறகு, எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.