பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் சாவு- எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு


பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் சாவு-  எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பலி எண்ணிக்கையை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாகவும், பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் இறந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பல்லாரி விம்ஸ் ஆஸ்பத்திரியில் மின் தடை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்று மந்திரி ஸ்ரீராமுலு பொய் பேசி வருகிறார். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டு சட்டசபையில் நான் விவாதித்தேன். இதன் காரணமாக விம்ஸ் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி அறிவித்துள்ளார். மின்தடையால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்று மந்திரி ஸ்ரீராமுலு கூறுகிறார். அப்படி என்றால் பலியான நோயாளிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கியது ஏன்?.

விம்ஸ் ஆஸ்பத்திரியில் மின்தடையால் நோயாளிகள் உயிரிழந்திருப்பது பற்றி அறிந்தும், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்ளிட்ட எந்த மந்திரியும் பல்லாரிக்கு செல்லவில்லை. சுகாதாரத்துறை மந்திரி என்ன செய்து கொண்டு இருக்கிறார். 3 பேர் பலி பற்றி வாய் திறக்காமல் உள்ளார். பல்லாரி விம்ஸ் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் பலி எண்ணிக்கையும் மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது. அங்கு ஏற்பட்ட மின்தடையால் உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 அல்ல, 5 நோயாளிகள் பலியாகி இருக்கிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story