பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 5 ஆண்டு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
சர்வதேச பயங்கரவாத அமைப்பு களுடனான தொடர்பை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி,
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேவை அமைப்பாக 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு தொடங்கப்பட்டது.
புகார்-நடவடிக்கை
ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாதச்செயல்களை அரங்கேற்ற நிதி உதவி அளித்து வருகிறது, வன்முறைக்கு துணை போகிறது, மதக்கலவரத்தைத் தூண்டுகிறது என புகார்கள் எழுந்தன.
இந்த புகார்களைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., கடந்த 22-ந்தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. அமைப்பின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தியது. 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இதைக்கண்டித்து கேரள மாநிலத்தில் மறுநாளில் (23-ந்தேதி) முழு அடைப்பு, பேரணி நடத்தப்பட்டதும், அதில் ஆங்காங்கே வன்முறைக்காட்சிகள் நடந்ததும் நினைவுகூரத்தக்கது.
மேலும், நேற்று முன்தினம் 2-வது நாளாக உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், அந்தந்த மாநில போலீஸ் சார்பில் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
5 ஆண்டுகளுக்கு அதிரடி தடை
இந்தநிலையில், ஐ.எஸ். போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பி.எப்.ஐ. அமைப்பு தொடர்பில் உள்ளது என்று கூறி, அந்த அமைப்பை மத்திய அரசு நேற்று 5 ஆண்டு காலத்துக்கு அதிரடியாக தடை செய்தது.
இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
8 துணை அமைப்புகளுக்கும் தடை
பி.எப்.ஐ. அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படுகிற 8 அமைப்புகள் மீதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள அந்த அமைப்புகள் வருமாறு:-
ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகும்.
இந்த அமைப்புகள் அனைத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.
தடையின் பின்னணி இதுதான்....
பி.எப்.ஐ. அமைப்பினை தடை செய்வதற்கு உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநில அரசுகள் பரிந்துரை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
பி.எப்.ஐ. மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டில் பயங்கரவாத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில், பி.எப்.ஐ. அமைப்பு, பயங்கரவாத அடிப்படையிலானதும், பிற்போக்குத்தனமானதுமான ஆட்சியை ஊக்குவிப்பதோடு, அதை செயல்படுத்தவும் முயற்சிக்கிறது; தேசவிரோத உணர்வுகளை தொடர்ந்து பரப்புவதுடன், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நாட்டுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மோசமாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள்:-
* விசாரணைகள் நடத்தியதில், பி.எப்.ஐ. அமைப்புக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
* ரீஹேப் இந்தியா பவுண்டேசன், பி.எப்.ஐ. உறுப்பினர்கள் மூலம் நிதி வசூலிக்கிறது.
* பி.எப்.ஐ. அமைப்பின் சில உறுப்பினர்கள், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, எம்பவர் இந்தியா பவுண்டேசன், ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகியவற்றிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
* ஜூனியர் பிரண்ட், அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட் ஆகியவற்றின் நடவடிக்கைகள், பி.எப்.ஐ. தலைவர்களால் கண்காணிக்கப்பட்டும், ஒருங்கிணைக்கப்பட்டும் வந்துள்ளன.
* இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், இமாம்கள், வக்கீல்கள் அல்லது சமூகத்தின் நலிந்த பிரிவினரிடையே உறுப்பினர்களை சேர்க்கவும், செல்வாக்கு ஏற்படுத்தவும், நிதி திரட்டும் திறனை விரிவுபடுத்தவும் பி.எப்.ஐ. அமைப்பு, தனது இந்த துணை அமைப்புகளை உருவாக்கியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அதிகாரம்
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையில், "பி.எப்.ஐ. உடன் இணைந்துள்ள துணை அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் இடங்களை கைப்பற்றவும், அவர்களின் உறுப்பினர்களை கைது செய்வதும் நடவடிக்கைகளில் அடங்கும்" என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் வன்முறையிலும், நாசகார செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எப்.ஐ. அமைப்பினர் நடத்தி உள்ள குற்றச்செயல்களில், கல்லூரி பேராசிரியரின் கைகால்களை வெட்டுதல், பிற மதத்தினரைக் கொலை செய்தல், முக்கிய நபர்கள் மற்றும் இடங்களைக் குறிவைத்து தாக்குவதற்கு வெடிபொருட்களைப் பெறுதல், பொதுச்சொத்துகளை அழித்தல் ஆகியவை அடங்கும் எனவும் அறிவிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கையில், பி.எப்.ஐ. அமைப்பினரின் வன்முறையில் பாதிக்கப்பட்ட பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்" எனவும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பி.எப்.ஐ. தொடர்புள்ள பல நிகழ்வுகள் உள்ளன. பி.எப்.ஐ. அமைப்பின் சில ஆர்வலர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவங்களில் பி.எப்.ஐ. அமைப்பினர் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சிலர் மாநில போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் அறிவிக்கை கூறுகிறது.
பி.எப்.ஐ. அமைப்பையும், அதன் துணை அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிர்வாகிகள் கைது
இந்த பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், பொதுச்செயலாளர் அனிஸ் அகமது, தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கோயா, துணைத்தலைவர் இ.எம்.அப்துர் ரகுமான், செயலாளர் அப்துல் வாகித் சேட் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.