கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட பி.எப்.ஐ உறுப்பினர்கள் 500 பேர் கைது!
கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர், 400 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என்று சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி விஜய் சாகரே தெரிவித்தார்.
பல மாநிலங்களில் நேற்று, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ சார்பில் கேரளா முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயங்கின. அதேவேளை, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால் இந்த போராட்டத்தின் போது பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.கண்ணூர் மாவட்டம் மட்டனூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கொல்லத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள் போலீசை தாக்கினர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கடைகளின் ஷட்டர்களை அடைக்க சொல்லி மிரட்டிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை உள்ளூர் மக்கள் தாக்கினர். உடனே, பிஎப்ஐ ஓடத் தொடங்கினர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கடைகள் மீது தாக்குதல் நடத்தியது.
பல இடங்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வன்முறையாக மாறிய முழு அடைப்பு போராட்டம் குறித்து கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
70 பேருந்துகள் கல்வீச்சில் நாசம் செய்யப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் கேரள ஐகோர்ட்டில் தெரிவித்தார். இதில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முழு அடைப்பு அழைப்பு விடுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கடையடைப்பு போராட்டத்திற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.
முழு அடைப்பு போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்று மாநில அரசுக்கு கோர்ட்டு தெரிவித்துள்ளது.
பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பின் செயல்பாட்டாளர்கள் ஏராளமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.