இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு சம அளவு முக்கியத்துவம் - மராட்டிய அரசு முடிவு!


இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு சம அளவு முக்கியத்துவம் - மராட்டிய அரசு முடிவு!
x

இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

புனே,

மராட்டிய மாநிலத்தில் தற்போது, பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், சட்டம் மற்றும் பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி மந்திரி உதய் சமந்த் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக, பல்வேறு கல்வி நிறுவன அதிகாரிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி உதய் சமந்த் கூறியதாவது;-

"இந்த புதிய முறை இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, (அதாவது 2023-24) அறிமுகப்படுத்தப்படும்.

தற்போதுள்ள முறைப்படி, மாணவர்கள் பொது நுழைவுத்தேர்வில் (சிஇடி) மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, இப்போது நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுக்கும், அத்துடன் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், 12 ஆம் வகுப்பு படிப்பில் நல்ல அடித்தளத்தை உருவாக்க மாணவர்களுக்கு இந்த முறை உதவும்.

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முறையை போலவே, முதல் பொதுநுழைவுத்தேர்வில் மாணவர்களின் செயல்திறன் திருப்தி அடையவில்லை என்றால், சிறந்த மதிப்பெண் பெற, இரண்டாவது முறை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதல் பொதுநுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான பின், சில நாள்களிலேயே இரண்டாவது முறை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story