புதிய எம்.எல்.ஏ.க்களில் 55 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்


புதிய எம்.எல்.ஏ.க்களில் 55 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
x
தினத்தந்தி 17 May 2023 6:30 PM GMT (Updated: 17 May 2023 6:30 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 55 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் 97 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

பெங்களூரு:-

காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. அதன் முடிவுகள் கடந்த 13-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனாதளம்(எஸ்) கட்சி 19 இடங்களிலும், சர்வோதயா கட்சி, ஜனார்த்தன ரெட்டியின் கட்சி தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 224 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது அதாவது 55 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 97 சதவீதம் பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். இது ஏ.டி.ஆர். என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

55 சதவீதம் பேர் மீது...

கடந்த சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட இந்த முறை அதிக குற்ற வழக்குகளை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைய உள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. அதில் 54 எம்.எல்.ஏ.க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருந்தன.

ஆனால் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் 224 பேரில் 122 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 71 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 55 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

கற்பழிப்பு வழக்கு

ஒரு எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கும், 3 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. 7 பேர் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகளும், அவர்களில் ஒருவர் மீது கற்பழிப்பு வழக்கும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கட்சி வாரியாக பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் 135 எம்.எல்.ஏ.க்களில் 78 பேர் மீதும், பா.ஜனதாவில் 66 எம்.எல்.ஏ.க்களில் 34 பேர் மீதும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 19 எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியின் தலைவர் ஜனார்த்தன ரெட்டி மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

97 சதவீத கோடீசுவரர்கள்

மேலும் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட 224 எம்.எல்.ஏ.க்களில் 217 பேர் கோடீசுவரர்கள் ஆவர். அதாவது சட்டசபைக்குள் நுழையும் எம்.எல்.ஏ.க்களில் 97 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் ஆவர். காங்கிரசை சேர்ந்த 135 எம்.எல்.ஏ.க்களில் 132 பேரும், பா.ஜனதாவில் 66 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 19 பேரில் 18 எம்.எல்.ஏ.க்களும், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டியும் கோடீசுவரர்கள் ஆவர்.

அதிகபட்சமாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,413 கோடி சொத்து வைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக கவுரிபித்தனூர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. புட்டசாமிகவுடாவுக்கு ரூ.1,267 கோடி சொத்து உள்ளது. கோவிந்தராஜ்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியாகிருஷ்ணா ரூ.1,156 கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார்.

குறைந்தபட்சமாக சுள்ளியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பகிரதி முருள்யா ரூ.28 லட்சம் சொத்து வைத்துள்ளார். கிருஷ்ணராஜா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரூ.48 லட்சம் சொத்தும், முதோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆர்.பி.திம்மாப்பூர் ரூ.58 லட்சம் சொத்தும் என 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.


Next Story