கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 577 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீசு; மந்திரி சுதாகர்


கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 577 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீசு; மந்திரி சுதாகர்
x

கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரை அடுத்து 577 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நோட்டீசு அனுப்பி இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தனியார் மருத்துவமனைகள்

ஆயுஸ்மான் பாரத் மற்றும் சுகாதார கர்நாடக திட்டத்தின் கீழ் பரிந்துரை அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முன்பே முடிவு செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகள் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். சிகி்ச்சை செலவுகள் சுவர்ண சுகாதார பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் செலுத்தப்படுகிறது.

இதில் கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு 577 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோாயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக ரூ.18.87 கோடியை தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அந்த தொகை சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குடும்பத்திற்கு திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1.58 கோடியை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை

தகுதியான கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றது. கொரோனா சிகிச்சைக்காக கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது, ரூ.391 கோடி, 2-வது அலையின்போது ரூ.376 கோடி மற்றும் 3-வது அலையில் ரூ.11.80 கோடியை அரசு செலவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசிடம் இருந்து கட்டணத்தை பெற்றது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் இருந்தும் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளடம் வசூலித்த தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

1 More update

Next Story