4ஜியை விட 10 மடங்கு வேகம் - விரைவில் வருகிறது 5ஜி..!!


4ஜியை விட 10 மடங்கு வேகம் - விரைவில் வருகிறது 5ஜி..!!
x

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை பயன்பாட்டில் உள்ளது. அதே சமயம் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் எப்போது 5ஜி சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது

5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விட தொலைத்தொடர்புத்துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,வரும் ஜூலை மாதத்திற்குள் ஏலத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 4ஜி அலைக்கற்றையைவிட 10 மடங்கு வேகமாக 5ஜி அலைக்கற்றை செயல்படும் எனக் கூறப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதில் செலவை குறைக்கும் நோக்கில் 72 ஆயிரத்து 97 (72,097.85) மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுப்பவர்கள் அதற்கான தொகையை 20 தவணைகளாக செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும் என தெரிகிறது.

5ஜி சேவையை தொடங்குவதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகள், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story