மேற்கு வங்காளம்: லாரி - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலி
லாரி - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தின் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில், அபர்ணா என்ற நோயாளியை கிர்பாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அபர்ணாவின் குடும்பத்தினர் 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருப்பினும், அபர்ணாவும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா? அல்லது 2 வாகனங்களிலும் பழுது ஏதேனும் இருந்ததா? என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.