ஆண் ஊழியர்களுக்கும் 6 மாதங்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை; கர்நாடக அரசு உத்தரவு
ஆண் ஊழியர்களுக்கும் 6 மாதங்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை என்று கர்நாடக அரசு உத்தரவு.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மாநில அரசு சார்பில் அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்புக்காக 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஆண் ஊழியர்கள் (திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்து ஆனவர்கள் அல்லது வேறு காரணங்களால் தனியாக இருப்பவர்கள்) தங்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்த கர்நாடக அரசு, குழந்தைகளுடன் மனைவி இல்லாமல் தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் 6 மாதங்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கான இந்த விடுமுறை ரத்து செய்யப்படும். ஒருவர் 2 மாதங்கள் விடுமுறை எடுத்துவிட்டு, இன்னும் 4 மாதங்கள் விடுமுறையை வைத்திருந்தால், அந்த 4 மாத விடுமுறை ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.