வடகர்நாடகத்தில் மழைக்கு தாய்-மகன் உள்பட 6 பேர் சாவு


வடகர்நாடகத்தில் மழைக்கு தாய்-மகன் உள்பட 6 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகத்தில் கனமழைக்கு தாய்-மகன் உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பெங்களூரு:

வடகர்நாடகத்தில் கனமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்தது. பெங்களூரு உள்பட 30 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. பெங்களூருவில் மழையால் தாக்கத்தால் ஏரிகள் உடைந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுபோல வடகர்நாடக மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை முடிந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது மெல்ல, மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, கொப்பல், ராய்ச்சூரில் கனமழை பெய்து வருகிறது.

6 பேர் சாவு

கொப்பல் மாவட்டத்தில் உள்ள எலபுர்கா தாலுகா சங்கனூர் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக அந்த கிராமத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சங்கனூர் கிராமத்தை கிரிஷா காலனகவுடா (வயது 32), புவனேஸ்வரி சந்தவீரய்யா (40), பவித்ரா சித்தய்யா (45), வீணா பசவராஜ் (19) ஆகியோர் ஆற்றை கடக்க முயன்றனர். அப்போது 4 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் எலபுர்கா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை. நேற்று 2-வது நாளாக 4 பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வீனா உடலை தவிர மற்ற 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. வீனாவின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபோல பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா மடம்கேரி கிராமத்தில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி எல்லவ்வா (40), அவரது மகன் பிரஜ்வல் (5) ஆகியோர் உயிரிழந்தனர். 6 பேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து எலபுர்கா, சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story