கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது
தட்சிண கன்னடா, உடுப்பியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் சூரத்கல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக விக்ரம், சதீஸ், சர்ப்ராஸ், அக்ஷய் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா, ஆட்டோ, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் சூரத்கல் பகுதியில் நின்று கஞ்சா விற்றதாக ஒடிசாவை சேர்ந்த சிந்தாமணி, துபா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா பயன்படுத்தியதாக ஜூனைத் சையத் (வயது 22) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், பைந்தூர் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா புகைத்த ஷிரூரை சேர்ந்த வித்யாதர் பூஜாரி (20), நாகராஜா மெகாவீரா (23) ஆகிய 2 பேரையும் பைந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.