மேற்கு வங்காளம் விஷ சாராயத்திற்கு 7 பேர் பலி; விசாரணை செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு


மேற்கு வங்காளம் விஷ சாராயத்திற்கு 7 பேர் பலி; விசாரணை செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு
x

மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.



ஹவுரா,



மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விஷ சாராயம் என தெரியாமல் அதனை பலர் குடித்துள்ளனர். இதன் பின்பு, வீட்டுக்கு சென்ற அவர்களில் பலருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. உடல்நல பாதிப்பும் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து உள்ளனர்.

இந்த உயிரிழப்பு 7 உயர்ந்து உள்ளது. இது தவிர, 20 பேர் டி.எல். ஜெய்ஸ்வால் மருத்துவமனை மற்றும் ஹவுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் இருந்து குறைந்த தொலைவிலேயே, தடை செய்யப்பட்ட சாராய விற்பனையில் சிலர் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் செய்தி ஊடகங்களில் வெளிவந்த நிலையில், இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி.) இதனை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

இதேபோன்று, டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே தரையில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனையும் என்.எச்.ஆர்.சி. தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளோம் என தெரிவித்து உள்ளது.


Next Story