இன்று 74-வது குடியரசு தின விழா: டெல்லியில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்


இன்று 74-வது குடியரசு தின விழா: டெல்லியில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்
x

கோப்புப்படம்

குடியரசு தினத்தையொட்டி இன்று (வியாழக்கிழமை) டெல்லி கடமையின் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

புதுடெல்லி,

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் முன்கூட்டியே அங்கு வருகை தருவார்கள்.

பிரதமர் மோடி

விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தருவார்.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த ஆண்டு நவீனத்துவங்கள் புகுத்தப்பட்டு உள்ளன. ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும்.

அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும்.

பிரமாண்டமாக இருக்கும்

இந்த ஆண்டு அணிவகுப்பு பிரமாண்டமாக இருக்கும் என தெரிகிறது. அணிவகுப்பில் இடம்பெறும் அம்சங்கள் நாட்டின் உள்நாட்டு திறன்கள், பெண் சக்தி, ராணுவ வலிமை, பன்முகத்தன்மை போன்றவற்றை பிரதிபலிக்கும்.

ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டகப்படையும் இடம்பெறுகிறது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொள்வது சிறப்பு. விமானப்படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணிவகுக்கிறார்கள்.

148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள். இது தவிர மத்திய ஆயுதப்படை, ரெயில்வே பாதுகாப்புப்படை, டெல்லி போலீஸ், எல்லைப்பாதுகாப்பு படையின் ஒட்டகப்பிரிவு ஆகியவையும் பங்கேற்கிறது.

இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு உபகரணங்கள் அணிவகுக்கின்றன. பீரங்கிகள், ஏவுகணைகள் போன்றவை இதில் இடம்பெறும்.

எகிப்து அதிபர்

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லி வந்துவிட்டார். அவரது முன்னிலையில் எகிப்து நாட்டு படையினரும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்கின்றன. நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அணிவகுப்பின் இறுதியாக வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் விமான சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. விமான சாகசத்தில் 45 விமானங்கள் பங்கேற்கின்றன. ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது.

நாட்டின் குடியரசு தின விழாவை பாதுகாப்பாக நடத்தி முடித்திட டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story