75 ஆண்டுகளில் இல்லாத மழை ...! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு...! தத்தளிக்கும் மக்கள்...!


75 ஆண்டுகளில் இல்லாத  மழை ...! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு...!  தத்தளிக்கும் மக்கள்...!
x

ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.

பெங்களூர்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஜூன் மாதத்தில் பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதே போல் தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது.

சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதே போல் கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன.

இதுகுறித்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அதிகாலை 5 மணி வரை பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.

பொதுவாக பெங்களூருவில் ஒரு பகுதியில் மழை பெய்தால், மற்றொரு பகுதியில் மழை இருக்காது என்ற நிலை தான் உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நகரம் முழுவதும் பரவலாக மழை கொட்டித்தீா்த்தது. குறிப்பாக மகாதேவபுரா, பொம்மனஹள்ளியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

அதாவது 130 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரந்து விாிந்துள்ள பெல்லந்தூர் ஏரி முழுமையாக நிரம்பியது. அதில் இருந்து நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடி கட்டிடங்களை சூழ்ந்தது. 75 ஆண்டுகளில் இல்லாத அலவு பெங்களூரில் மழை பெய்து உள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே-அவுட் வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சர்ஜாப்புரா ரோடும் வெள்ளம் தேங்கி ஏரி போல் மாறிவிட்டது. அங்கு 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

அவர்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். மேலும் அங்கு வீடுகளில் இருந்த மக்களுக்கு பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட உணவு பொட்டலங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சென்று வினியோகம் செய்தனர். சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி சாலையில் கைகொண்டரஹள்ளியில் சன்னி புரூக்ஸ் லே-அவுட் உள்ளது.

அந்த லே-அவுட்டிலும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அங்கு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டன.

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதாவது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story