வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி; கன்னட துணை நடிகை உஷா ரவிசங்கர் கைது


வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி; கன்னட துணை நடிகை உஷா ரவிசங்கர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த கன்னட துணை நடிகை உஷா ரவிசங்கரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:-

நடிகை உஷா ரவிசங்கர்

சிவமொக்கா டவுன் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கும், கன்னட துணை நடிகை உஷா ரவிசங்கர் என்பவருக்கும் முகநூல்(பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. நடிகை உஷா ரவிசங்கர், கன்னட சின்னத்திரையில் நடித்து வந்தார். மேலும் அவர் 2 கன்னட திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்த நிலையில் சரவணனும், நடிகை உஷா ரவிசங்கரும் காதலித்து வந்தனர். மேலும் செல்போன் எண்களையும் பரிமாறி பேசி வந்தனர்.

இந்த நிலையில், திருமண ஆசைகாட்டி சரவணனிடம் இருந்து நடிகை உஷா

ரவிசங்கர் பணம் கேட்டுள்ளார். மேலும் சரவணனின் கடன் அட்டையை பயன்படுத்தியும், பல்வேறு தவணைகளாகவும் ரூ.8 லட்சம் வரையில் சரவணனிடம் இருந்து நடிகை உஷா ரவிசங்கர் பெற்றார். அந்த பணத்தைக் கொண்டு அவர் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.

கைது

பின்னர் சரவணனை திருமணம் செய்ய மறுத்த நடிகை உஷா ரவிசங்கர், ரூ.8 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இருந்தார். இதுபற்றி முதலில் சிவமொக்காவில் உள்ள வினோபா நகர் போலீசில் சரவணன் புகார் செய்தார். ஆனால் அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சரவணன் நேரடியாக கோர்ட்டில் புகார் அளித்தார்.

அதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் சிவமொக்கா வினோபா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகை உஷா ரவிசங்கரை கைது செய்தனர். மேலும் அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கினர். மோசடி வழக்கில் நடிகை உஷா ரவிசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னட திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story