காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி 80 சதவீதம் நிறைவு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு:-
பரமேஸ்வர் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் தேர்தல் பணி மனையில் முன்னாள் துணை முதல்-மந்திரியும், தேர்தல் அறிக்கை குழு தயார் செய்யும் குழு தலைவருமான ஜி.பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
80 சதவீத பணி நிறைவு
வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஊழலற்ற நிர்வாகம் கொடுப்போம். மேலும் மாநிலத்தை அனைத்து இன மக்களும் சேர்ந்து அமைதிபூங்காவாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாங்கள் கடந்த 4 மாதங்களாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம். 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
நாங்கள் சமுதாயத்தில் நிகழும் மக்கள் பிரச்சினைகளை நேரில் பார்த்து கருத்து கேட்டு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள், மீனவர்கள், பெண்கள், டிரைவர்கள், பல்வேறு சங்கங்களுடன் ஆலோசித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வடிவமைத்து வருகிறோம். முஸ்லிம் சமுதாயத்திற்கான இடதுஒதுக்கீடு குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.