இந்த ஆண்டு வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 87 லட்சம் பக்தர்கள் வருகை
இந்த ஆண்டு வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 87 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் 9 ஆண்டுகளில் இதுவே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு,
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலையில் பிரசித்திபெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 6-ந்தேதி வரை வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 86.40 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த 9 ஆண்டுகளிலேயே அதிக எண்ணிக்கை ஆகும். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இம்மாத இறுதிக்குள் அவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டிவிடும் என வைஷ்ணவி தேவி கோவில் வாரிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
தற்போது இங்கு தினசரி சராசரியாக 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 11.29 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். ஆனாலும் அந்த ஜனவரி மாதம் இந்தக் கோவிலுக்கு 4.38 லட்சம் பக்தர்கள் வந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு, வசதி கருதி வைஷ்ணவி தேவி கோவிலில் பல நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என இக்கோவில் வாரிய வட்டாரங்கள்தெரிவித்தன.