வனத்துறை அலுவலகத்தில் 88 கிலோ சந்தன மரக்கட்டைகள் திருட்டு


வனத்துறை அலுவலகத்தில் 88 கிலோ சந்தன மரக்கட்டைகள் திருட்டு
x
தினத்தந்தி 9 Oct 2023 6:26 AM GMT (Updated: 9 Oct 2023 7:38 AM GMT)

கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 88 கிலோ சந்தன மரக்கட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

யாதகிரி:-

மராட்டியத்தை...

யாதகிரி மாவட்டத்தில் கட்டிகுனி வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான காட்டு மரங்கள் உள்ளன. குறிப்பாக சந்தன மரங்கள் அதிகம் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக மராட்டியத்தை சேர்ந்த சச்சின் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 85 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மற்றொரு சம்பவத்தின்போது 11 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக 102 கிலோ சந்தன மரக்கட்டைகளை, வனத்துறை அலுவலகத்தில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்திருந்தனர். அந்த அலுவலகத்திற்கு இரவு நேர காவலாளி மற்றும் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு கிடையாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வனத்துறை அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளில் 88 கிலோ மரக்கட்டைகள் திருட்டு போனது.

2 பேர் பணியிடை நீக்கம்

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று இரவில் லாரியில் வந்த மர்மநபர்கள், வனத்துறைக்கு சொந்தமான அலுவலகத்தில் புகுந்து அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளை திருடி சென்றனர். இதில் வனத்துறை அதிகாரிகளின் பங்கு இருப்பதாக யாதகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கஜோல் பட்டீல் என்பவர் கூறுகையில் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் திருடப்பட்டுள்ளது.

இதில் வன அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது என்றார். இதுதொடர்பாக மேல்கோட்டை துணை மண்டல வன அதிகாரி சந்திர ஷா மற்றும் ரோந்து பணி அதிகாரி ரிஷ்வான் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் புகுந்து சந்தன மரக்கட்டைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story