கழுதைகளை விற்பதாக கூறி விவசாயியிடம் ரூ.9½ லட்சம் மோசடி


கழுதைகளை விற்பதாக கூறி விவசாயியிடம் ரூ.9½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில் கழுதைகளை விற்பதாக கூறி விவசாயியிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்

விவசாயி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோதாவரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது ராமானுபாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாளிகா ரவீந்திரா. விவசாயியான இவர் பசுக்கள் மற்றும் கழுதைகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கன்னட டி.வி. சேனல் ஒன்றில் சீனிவாசகவுடா என்பவர் கழுதைகளை வளர்ப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவரித்துள்ளார்.

இதை மாளிகா ரவீந்திரா கவனித்துள்ளார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இதுபற்றி உரிய தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அழைப்பு விடுத்தார்

இந்த நிலையில், மாளிகா ரவீந்திராவை செல்போன் மூலம் சீனிவாசகவுடா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னுடைய கழுதை பண்ணையை நீங்கள் பார்க்க வேண்டும் என்றும், அதற்காக நேரில் வர வேண்டும் என்றும் கூறி மாளிகா ரவீந்திராவுக்கு சீனிவாசகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.

அதை ஏற்ற மாளிகா ரவீந்திரா, சீனிவாசகவுடா கூறிய முகவரியான தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் தாலுகா ஷெனவா குருனாடு கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவர் சீனிவாசகவுடாவை சந்தித்தார்.

ரூ.11 லட்சம்

அப்போது சீனிவாசகவுடா தன்னிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஹிலாரி ரக கழுதைகள் இருப்பதாகவும், அவை அதிக அளவில் பால் தரும் என்றும் கூறினார். மேலும் ஒரு ஹிலாரி ரக கழுதையின் விலை ரூ.1 லட்சம் என்றும், இதுபோல் தன்னிடம் 11 கழுதைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து மாளிகா ரவீந்திரா அந்த கழுதைகளை வாங்க விரும்பினார். மேலும் அவர் சீனிவாசகவுடாவிடம் தனது விருப்பதை தெரிவித்தார்.

அப்போது அவர் 11 கழுதைகளையும் ரூ.11 லட்சத்துக்கு விற்க முன் வந்தார். ஆனால் மாளிகா ரவீந்திரா தற்போது தன்னிடம் ரூ.11 லட்சம் இல்லை என்றும், ரூ.9.45 லட்சம் தான் இருப்பதாகவும் கூறினார்.

மோசடி

அதை ஏற்றுக்கொண்ட சீனிவாசகவுடா, மாளிகா ரவீந்திராவிடம் இருந்து ரூ.9.45 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மீதி பணத்தை கொடுத்த பின்பு 11 கழுதைகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்டு மாளிகா ரவீந்திரா வந்துவிட்டார். பின்னர் 15 நாட்கள் கழித்து மீதி பணத்தை கொடுத்துவிட்டு கழுதைகளை பெற்றுக்கொள்ள மாளிகா ரவீந்திரா முயன்றார்.

அப்போது சீனிவாசகவுடா கழுதைகளை கொடுக்காமலும், தான் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுபற்றி மாளிகா ரவீந்திரா பாகேபள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story