தனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு; மேலும் 20 பேர் படுகாயம்


தனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு;  மேலும் 20 பேர் படுகாயம்
x

உப்பள்ளி அருகே தனியார் பஸ்- லாரி மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

உப்பள்ளி: உப்பள்ளி அருகே தனியார் பஸ்- லாரி மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பஸ்-லாரி மோதல்

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் இச்சலகரஞ்சி பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் தரிகல் தாராவதி கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல பஸ் டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ் பலத்த சேதமடைந்தன. லாரியின் முன்பகுதியில் பஸ் பாதியளவு புகுந்தது.

9 பேர் பலி

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர், லாரி டிரைவர், கிளீனர் மற்றும் பயணிகள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 23 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உடனே அப்பகுதி மக்களும், உப்பள்ளி வடக்கு போக்குவரத்து போலீசாரும் விரைந்து சென்று காயமடைந்த 23 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பலியான 6 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மீதமுள்ள 20 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

போலீஸ் கமிஷனர் விசாரணை

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தார்வார்-உப்பள்ளி போலீஸ் கமிஷனர் லாபுராம் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

முதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் தெரியாமல் இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய அடையாளம் தெரியவந்தது.

மராட்டியர்கள் 19 பேர் பயணம்

அதாவது பலியானவர்கள் பெங்களூரு பேடரஹள்ளியை சேர்ந்த பஸ் டிரைவர் நாகராஜா ஆச்சார் (வயது 56), அட்டாவுல்லா கான் (40), இச்சலகரஞ்சி பாபாஷோ சவுகாலே (59), மஸ்தான், மைசூருவை சேர்ந்த முகமது தயன் பேக் (17), மராட்டிய மாநிலம் கோலாப்புராவை சேர்ந்த அக்‌ஷய் தாவர் (28), ஆகீப் (28), ஆபாக் (40) என்பது தெரியவந்தது. ஆனால் பலியான ஒருவரின் பெயர் விவரம் தெரியவில்லை.

மேலும் பசவராஜூ, சஞ்சய், சந்திரகாந்த் பாண்டுரங்கா, சுலோச்சனா மதுகார், சோமகல், அனிதா ராபூத், அனிதா சங்கல், முகமத் பயாஜ் உள்பட 20 பேர் காயமடைந்தவர்கள் ஆவர். விபத்தில் சிக்கிய பஸ்சில் மராட்டியத்தை சேர்ந்த 19 பேரும், நேபாளத்தை சேர்ந்த 4 பேரும், கர்நாடகத்தை சேர்ந்த 4 பேரும், தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக உப்பள்ளி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2-வது விபத்து

கடந்த 21-ந்தேதி அதிகாலை தார்வார் அருக பெனகட்சி கிராமத்தில் மரத்தில் ஜீப் மோதிய விபத்தில் திருமண கோஷ்டியினர் 9 பேர் பலியாகியிருந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் தற்போது தனியார் பஸ்- லாரி மோதிய விபத்தில் பயணிகள் உள்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story