ரூ.97 லட்சம் கொள்ளை வழக்கில் கேரளாவில் பதுங்கிய 9 பேர் கைது
பெங்களூருவில் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
ரூ.97 லட்சம் கொள்ளை
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களான பாலாஜி, மோகன், டிரைவர் யாசர் அராபத், காவலாளி காந்தராஜ் ஆகிய 4 பேரும் ஒரு வாகனத்தில் ரூ.97 லட்சத்தை மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள், பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், காவலாளியை மிரட்டி ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
9 பேர் கைது
இந்த நிலையில், ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாக கேரளாவில் பதுங்கி இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் சுஜீத், அதுல், ஜமீர், சமீல், சிஜில், சரத், ஷபி, முகமது ஜமால் மற்றும் குடகு மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபீ என்று தெரிந்தது. இவர்களில் ஜமால் இதற்கு முன்பு அந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்திருந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பாக தான் அவர் வேலையை விட்டு இருந்தார்.
இதனால் அந்த நிறுவனம் பணம் நிரப்ப செல்வது பற்றிய தகவல்களை அறிந்திருந்த ஜமால், கேரள கும்பலுடன் சேர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றி இருந்தார். கைதானவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் ரொக்கம், 47 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.