தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலி
செல்லகெரே அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலியானது.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா நாராயணஹள்ளி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமன்னா என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் குழந்தை தமன்னா தவறி விழுந்து தத்தளித்தது.
ஆனால் இதனை அவளது பெற்றோர் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால் குழந்தை தமன்னா நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து பெற்றோர், சிறுமி தமன்னாவை தேடிப்பார்த்தனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி தமன்னாவின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செல்லகெரே போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சிறுமி தமன்னா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.