ராய்ச்சூரில் அசுத்த நீரை குடித்த 5 வயது சிறுவன் சாவு
ராய்ச்சூரில் அசுத்த நீரை குடித்த 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். மேலும் 20 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராய்ச்சூர்:-
5 வயது சிறுவன்
ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா ரேகலமரடி கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு அனுமேஷ் என்ற 5 வயது குழந்தை இருந்தான். இந்த கிராமத்திற்கு பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குடிநீரை குடித்த கிராமத்தை சேர்ந்த பலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் சிறுவன் அனுமேசுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுவனை அவனது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுமேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிராமத்திற்கு வினியோகிக்கப்பட்ட குடிநீர் அசுத்தமாக இருந்தது தெரிந்தது.
குடிநீருடன் கழிவுநீர்...
மேலும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக தேவதுர்கா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளின் அலட்சியம் தான் அசுத்த குடிநீர் வினியோகிக்க காரணம் என்பதும், அதனை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது சிறுவன் உயிரிழந்ததும் தெரிந்தது. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கிராம மக்கள் குடித்த நீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.