வரவேற்பு மேடையில முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்த மாப்பிள்ளை...! திருமணத்தை நிறுத்திய புதுப்பெண்


வரவேற்பு மேடையில முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்த மாப்பிள்ளை...! திருமணத்தை நிறுத்திய புதுப்பெண்
x

விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.

பரேலி:

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி (வயது 26) என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக தொடங்கியது. மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.

அப்போது திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார். விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.

இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்தார்.

சம்பவத்தை கேட்டறிந்த போலீசார் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாதமுறையில் தொட்டார். உடனே நான் அதை தடுத்தேன். பின்னர் அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன். அவர் என் சுயமரியாதையை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்டார்.

எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்? என பயமாக இருக்கிறது. எனவே அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார். மணமகளின் தாயார் கூறுகையில், எனது மருமகனின் நண்பர்கள் தூண்டுதலின் பேரிலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இப்போது என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை. நாங்கள் சமாதானப்படுத்தியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே நாங்கள் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறினார்.

ஆனால் இதுகுறித்து போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்த போது அவ்வாறு எந்த பந்தயமும் கட்டவில்லை என கூறினார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பங்கஜ் லாவணியா கூறுகையில், முறைப்படி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தற்போது விவேக் அக்னிகோத்ரியை மணமகள் நிராகரித்துள்ளார். எனவே 2 நாட்களுக்கு பிறகு அடுத்ததாக என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்றார்.


Next Story