பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து
பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹாசன்:-
ராமநகர் மாவட்டம் கனகபுராவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 71 பேர் சுற்றுலாவிற்காக ஹாசன் மாவட்டத்திற்கு பஸ்சில் வந்திருந்தனர். நேற்று அவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு பஸ்சில் கனகபுராவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா குவெம்புநகர் பகுதியில் வந்தபோது, பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. இதை பார்த்த டிரைவர் பஸ்சை தனது கட்டுபாட்டிற்கு கொண்டுவர முயற்சித்தார். ஆனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் 4 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஹாசன் மற்றும் பேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் பஸ்சை மீட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.