தீக்காயம் அடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு
கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் தீக்காளம் அடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பெங்களூரு:-
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே எம்.வி. லே-அவுட்டில் வசித்து வந்தவா ரவி. இவரது மனைவி பிரதிமா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி சமையல் அறையில் பிரதிமா பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயை வைத்திருந்தார். இதனை கவனிக்காமல் சமையல் அறையில் விளையாடிய குழந்தை பாத்திரத்தை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் குழந்தையின் உடலில் கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியது. உடனடியாக தங்களது குழந்தையை ரவி, பிரதிமா விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. தங்களது குழந்தையின் உடலை பார்த்து ரவி, பிரதிமா கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.