கன்றுக்குட்டியை கொண்டு சென்ற சரக்கு வாகனம் பின்னால் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பசுமாடு


கன்றுக்குட்டியை கொண்டு சென்ற சரக்கு வாகனம் பின்னால் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பசுமாடு
x

சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கன்றுக்குட்டியை கொண்டு சென்ற சரக்கு வாகனம் பின்னால் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி பசுமாடு பாசப்போராட்டம் நடத்தியது.

பாகல்கோட்டை:

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை (மாவட்டம்) அருகே உள்ள முச்சகண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு காலே. விவசாயி. இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார். இதில் ஒரு பசு மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜு காலே உள்பட சிலர் கன்றுக்குட்டியை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாகல்கோட்டை டவுன் நவநகரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மாட்டை உடன் அழைத்துச் செல்லவில்லை. இதை கவனித்த மாடு, தனது கன்றுக்குட்டியை எங்கேயே கொண்டு செல்கிறார்கள் என நினைத்து அந்த சரக்கு வாகனத்தின் பின்னால் மா.... மா.... என சத்தம்போட்டப்படி ஓடியது. ஆனால் இதை சரக்கு வாகனத்தில் கன்றுக்குட்டியை கொண்டு சென்றவர்கள் கவனிக்கவில்லை. இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கன்றுக்குட்டியை தேடி தாய் மாடு பாசப்போராட்டம் நடத்தியப்படி ஓடியது. ஒரு கட்டத்தில் வாகன ஓட்டிகள் இதை பார்த்து கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற சரக்கு வாகன டிரைவரிடம் கூறினர். அதன்பிறகே அவர்கள் மாட்டையும் அந்த சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே கன்றுக்குட்டியை கொண்டு சென்ற சரக்கு வாகனத்தை பின்னால் ஓடிச் சென்று தாய் மாடு பாசப்போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story