சர்வதேச தூக்க தினத்தையொட்டி ஊழியர்கள் தூங்குவதற்காக ஒரு நாள் விடுமுறை; பெங்களூரு நிறுவனம் நூதன அறிவிப்பு


சர்வதேச தூக்க தினத்தையொட்டி ஊழியர்கள் தூங்குவதற்காக ஒரு நாள் விடுமுறை; பெங்களூரு நிறுவனம் நூதன அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச தூக்க தினத்தையொட்டி ஊழியர்கள் தூங்குவதற்காக ஒரு நாள் விடுமுறை அளித்து பெங்களூரு நிறுவனம் நூதன அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பெங்களூரு:

அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல வகையான விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. இதில் உடல் நலக்குறைவால் எடுக்கும் விடுமுறை, இ.எல்., சி.எல். விடுமுறை ஆகியவையும் அடங்கும். ஆனால் பல நேரங்களில் அலுவலகங்களில் பணி நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்கள் விடுமுறை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட்' என்ற தனியார் நிறுவனம், சர்வதேச தூக்க தினத்தையொட்டி தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக வேக்பிட் நிறுவனம் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளது. இதில், சர்வதேச தூக்க தினத்தை மார்ச் 17-ந்தேதி (நேற்று) கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் 17-ந்தேதி விருப்ப விடுமுறை அளிக்கிறோம். தூக்க ஆர்வலராக, இந்த தூக்க நாளை ஒரு பண்டிகையாக கொண்டாடுவோம். இந்த தூக்க தினம் வெள்ளிக்கிழமை வருவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அனுபவிப்போம். மீண்டும் திங்கட்கிழமை சந்திப்போம். நீங்கள் நன்றாக தூங்கி ஓய்வெடுப்பீர்கள் என்று நம்புகிேறாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தனியார் நிறுவனத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று சர்வதேச தூக்க தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story