பச்சிளம் குழந்தையை கடித்து குதறி கொன்ற நாய்


பச்சிளம் குழந்தையை கடித்து குதறி கொன்ற நாய்
x

சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புகுந்து பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா:-

பச்சிளம் குழந்தை

சிவமொக்கா டவுனில் மெக்கான் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. பெரிய ஆஸ்பத்திரியாக இங்கு தனியாக மகப்பேறு வார்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மெக்கான் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய் ஒன்று பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வியப்படி சென்றது. பின்னர் ஒரு இடத்தில் வைத்து கடித்து குதறியது. இதனால் பச்சிளம் குழந்தை கதறி அழுதது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவலாளிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளிகள் விரைந்து சென்று நாயை விரட்டியடித்து, பச்சிளம் குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். ஆனாலும் அந்த பச்சிளம் குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது நாய் கடித்து குதறி கொன்றது பெண் குழந்தை என்பதும், அந்த குழந்தை பிறந்து ஓரிரு நாட்களே இருக்கும் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பச்சிளம் பெண் குழந்தையை, பெற்றவர்கள் மகப்பேறு வார்டின் பின்புறம் வைத்துவிட்டு சென்றதும், அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய், குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறி கொன்றதும் தெரியவந்தது.

தகாத உறவு மூலம் குழந்தை பிறந்ததால் அதனை கல்நெஞ்சம் கொண்ட தாய் விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகிறார்கள். அந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story