கரும்பு தோட்டத்தில் தீ விபத்து;


கரும்பு தோட்டத்தில் தீ விபத்து;
x

மண்டியாவில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விவசாயி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மண்டியா:-

கரும்பு தோட்டத்தில் தீ

மண்டியா தாலுகா மொடச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கய்யா (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மகாலிங்கய்யா, தனது கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மதியம் திடீரென்று கரும்பு ேதாட்டத்தில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென தோட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த தீயில் மகாலிங்கய்யா சிக்கிக் கொண்டார். இதனால் அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கதறி துடித்தார். இதனை பார்த்து அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

உடல் கருகி சாவு

ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் மகாலிங்கய்யா தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார். தீயில் கருகி உயிரிழந்த மகாலிங்கய்யாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து மண்டியா போலீசார் விரைந்து வந்து, மகாலிங்கய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த தீ விபத்தில் 20 ஏக்கரில் கரும்பு தோட்டம் மற்றும் வாழைத்தோட்டம் எரிந்து நாசமாகி இருந்தது. கரும்பு தோட்டத்தில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கரும்பு கழிவுகளுக்கு மகாலிங்கய்யா தீவைத்ததால் அந்த தீ தோட்டம் முழுவதும் பரவி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து மண்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story