கோலார் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை


கோலார் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை
x

கோலார் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

கோலார் மார்க்கெட்

ஆசியாவிலேயே மிகவும் பிரபலமானது கோலார் ஏ.பி.எம்.சி. தக்காளி மார்க்கெட். இந்த மார்க்கெட்டிற்கு மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், பெங்களூரு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளிகள் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை பொய்த்து போனதால் தக்காளி விளைச்சல் அதிகளவு இல்லை. இதனால் கோலார் மார்க்கெட்டிற்கு வரவேண்டிய தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ரூ.10 முதல் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி படிப்படியாக உயர்ந்தது.

ஜூன் மாத தொடக்கத்தில் இந்த தக்காளி விலை உயர்ந்தது. அதாவது 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.2,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.200 முதல் ரூ.280 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வு தொடர்ந்து 2 மாதங்கள் அமலில் இருந்தது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இல்லத்தரசிகள் தக்காளியை வாங்காமல் புறக்கணித்தனர். மேலும் பலர் இறைச்சிக்கு மாறினர்.

இது தவிர வெளி மாநிலத்தில் இருந்து கோலார் மார்க்கெட்டிற்கு வந்து தக்காளி வாங்கி செல்லும் வியாபாரிகளின் வரத்தும் குறைந்தது. இதனால் தக்காளி விலையும் படிப்படியாக குறைய தொடங்கியது.

ஒரு கூடை தக்காளி ரூ.700-க்கு விற்பனை

அதன்படி கடந்த ஜூலை மாத இறுதியில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1,700 விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 ஆக விற்பனையானது. இதற்கிடையில் தக்காளி விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்ய தொடங்கினர். நாளடைவில் இந்த சாகுபடியால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்தது.

அதன்படி கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ ரூ.13 முதல் ரூ.15-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும், 2-ம் ரக தக்காளி ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை

இந்தநிலையில் நேற்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30-க்கும், 2-ம் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலை தொடருமா? மேலும் குறையுமா என்பது பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதே நேரம் தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story