காளை மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை


காளை மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை
x

சிக்பள்ளாப்பூரில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த காளையை சிறுத்தை அடித்து கொன்றதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

காளை மாட்டை கொன்ற சிறுத்தை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா குண்டமண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, விவசாயி. இவர் தனது 2 காளை மாடுகளை வீட்டின் அருகேயிருந்த வயலில் மேய்வதற்காக விட்டிருந்தார். இதையடுத்து சில மணி நேரம் கழித்து அவர் அந்த மாடுகளை அழைத்து வருவதற்காக வயலுக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு மாடும் மட்டும் நின்றது. அந்த மாடும் இரத்த காயத்துடன் நின்றது. மற்றொரு மாடு மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராம மக்கள் உதவியுடன் அந்த காளை மாட்டை தேடி அலைந்தார்.

இதையடுத்து வயலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில், காளை மாடு இறந்து கிடந்தது. அதுவும் உடல் பகுதி முழுவதும் காணாமல்போனது. அதாவது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று காளை மாட்டை அடித்து கொன்றதுடன், அதை இழுத்து சென்று திண்றதாக தெரியவந்தது. இதனால் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இது குறித்து சிக்பள்ளாப்பூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

மக்கள் போராட்டம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இனியாவது நடவடிக்கை எடுத்து சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று கூறினர். மேலும் இழந்த காளை மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story