ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை


ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை
x

மைசூரு:-

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா ராசிமண்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ். விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து அதில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று நேற்றுமுன்தினம் இரவு வெளியேறியது. அந்த சிறுத்தை ராசிமண்டி கிராமத்திற்குள் மல்லேஷ் கொட்டகைக்குள் புகுந்து அங்கு இருந்த செம்மறி ஆடு ஒன்றை அடித்து கொன்றது. பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது. நேற்றுமுன்தினம் காலை ஆடுகளுக்கு தண்ணீர் வைக்க மல்லப்பா கொட்டகைக்கு சென்றார். அப்போது செம்மறி ஆடு ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மல்லப்பா பிரியப்பட்டணா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுத்தை ஆட்டை அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மல்லப்பா வனத்துறை சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்தநிலையில், வனத்துறையினரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், வனப்பகுதியல் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ராசிமண்டி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை அடித்து கொன்று வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்து உள்ளோம். மேலும் வேலைக்கு செல்ல முடியாமல் பயத்தில் வீட்டிலேயே கிராமமக்கள் முடங்கி கிடக்கிறார்கள். எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை வனத்துறையினர் ஏற்று சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story