மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி நஞ்சன்கூடுவில் சிறைபிடிப்பு


மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி நஞ்சன்கூடுவில் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை நஞ்சன்கூடுவில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மைசூரு

'நிபா' வைரஸ்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த மாவட்டத்தில் தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளை அம்மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தநிலையில் அண்டை மாநிலமான கர்நாடக எல்லை பகுதியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கேரள எல்லையில் உள்ள குடகு, சாம்ராஜ் நகர், தட்சிண கன்னடா ஆகிய பகுதிகளில் நிபா வைரஸ் பீதி இருந்து வருகிறது. இதனால் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இதேப்போல் சாம்ராஜ்நகர்- கேரள எல்லை பகுதியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மருத்துவ கழிவுகள்

இந்தநிலையில், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் கேரளாவில் இருந்து லாரிகளில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நஞ்சன்கூடு அருகே சாலையோரம் லாரியில் இருந்து மருத்துவ கழிவுகளை ஒருவர் கொட்டி கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரி டிரைவரிடம் சென்று இதுகுறித்து கேட்டனர். அப்போது, அவர் லாரியை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றார். இதனை கவனித்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனே மைசூரு புறநகர் போலீசிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் அச்சம்

விசாரணையில், லாரி கோழிக்கோடு மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் கேரளாவில் மருத்துவ மற்றும் குப்பை கழிவுகளை ஏற்றி அதனை வெளிமாநிலங்களில் கொட்டினால் ரூ. 15 ஆயிரம் வரை கிடைக்கும்.

இதனால் தான் நாங்கள் (டிரைவர்கள்) மருத்துவ கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி கொண்டு கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கொட்டி வருகிறோம் என டிரைவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் எங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளோம்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் சரியான முறையில் போலீசார், சுகாதாரத்துறையினர் சோதனை செய்வதில்லை.

சோதனை சாவடி

இதனால் தான் கேரளாவில் இருந்து லாரிகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றி கொண்டு மைசூரு மாவட்டத்தில் கொட்டி செல்கிறார்கள். எனவே போலீசார் சோதனை சாவடிகளில் வாகனங்களின் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும், என்றனர்.


Next Story