தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் ஆண் புலி செத்தது
சிவமொக்காவில் உள்ள தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் ஆண் புலி செத்தது
சிவமொக்கா:
சிவமொக்கா நகரையொட்டி தாவரேகொப்பா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 20 வயதான அனுமான் என்ற ஆண் புலியும் பராமரிக்கப்பட்டு வந்தது. 20 வயதான அந்த புலி, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இதனால் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் அந்த புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த புலி செத்தது. இதையடுத்து புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
வனத்துறையினர், உயிரியல் பூங்கா ஊழியர்கள் அந்த புலிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இறந்துபோன புலி மாலேசங்கர்-சாமுண்டி புலிகளுக்கு பிறந்தது நினைவுகூரத்தக்கது. அனுமான் புலி இறந்ததால், தாவரகொப்பா காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆக குறநை்து உள்ளது. பொதுவாக புலியின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டு வரை தான் என்றும், ஆனால் அனுமன் புலி 20 ஆண்டுகள் வரை வாழ்ந்திருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.