தனது காதலியுடன் சுற்றித்திரிந்ததால் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்; முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தனது காதலியுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தனது காதலியுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல்
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பவன் (வயது 23) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பவன், இளம்பெண்ணிடம் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண், அந்தோனி என்பவரை 2-வதாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தோனியும், இளம்பெண்ணும் குயின்ஸ் ரோட்டில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பலேகுன்ட்ரி சர்க்கிள் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கொலைவெறி தாக்குதல்
இதையறிந்து அங்கு பவன் தனது நண்பர்களான சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் வந்தார். பின்னர் அந்தோனியின் மோட்டார் சைக்கிளை அவர்கள் வழிமறித்தனர். மேலும் அந்தோனியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்த அவரை தாக்கினர்.
இந்த சமயத்தில் பவன் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அந்தோனியை கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கு நின்றவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தாக்குதலின்போது இளம்பெண் பவன் மற்றும் அவரது நண்பர்கள் காலில் விழுந்து அவரை விட்டுவிடும்படி கதறி அழுதார்.
3 பேர் கைது
இதையடுத்து இளம்பெண் விதான சவுதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வாலிபர்கள் வாளுடன் தாக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
அதனை பார்வையிட்ட போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் காதலன் பவன், சரத் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துகொண்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.