நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்தது


நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்தது
x

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு என அனைத்துக்கும் நேற்று முதல் நாடு முழுவதும் தடை அமலுக்கு வந்து உள்ளது.

புதுடெல்லி,


மறுசுழற்சி செய்ய முடியாத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இந்த பூமிப்பந்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறி வருகின்றன. இந்த கழிவுகளால் மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தான சூழல் உள்ளது.

எனவே இந்த வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

இதனால் இந்த பிளாஸ்டிக் கழிவு அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் நோக்கில் இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜூலை 1-ந் தேதி (நேற்று) முதல் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் 1-ந் தேதி முதல் தடை செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் நேற்று முதல் முழுமையான தடை அமலாகி இருக்கிறது. இதன் மூலம் மேற்படி பொருட்களை பயன்படுத்துதல், தயாரித்தல், விற்பனை, இருப்பு வைத்தல், வினியோகித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதில் முக்கியமாக காது கடையும் பிளாஸ்டிக் குச்சிகள், பலூன் குச்சிகள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ் கிரீம் குச்சிகள், தெர்மோகோல், தட்டுகள், கப், பிளாஸ்டிக் கண்ணாடி, முட்கரண்டி, கரண்டி, கத்தி, ஸ்டிரா உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த தடையை மீறுவது குற்ற நடவடிக்கையாக கருதப்பட்டு, அவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 15-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி அபராதம், சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இந்த தடையை வலிமையாக அமல்படுத்தும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இந்த பொருட்களின் சட்டவிரோத தயாரிப்பு, இறக்குமதி, இருப்பு வைத்தல், வினியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் சிறப்பு அமலாக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதைத்தவிர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச எல்லைகளில் சோதனைச்சாவடிகளை ஏற்படுத்தி மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச்செல்வதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறித்தப்பட்டு இருக்கிறது.


Next Story